அழகியபூமி
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இது அற்புதமான அழகிய பூமி . . .

"அன்பு இதயங்களே உங்களுக்கு எம் அழகிய பூமியின் இனிய வணக்கங்கள்" இணைய தளத்தில் இணைந்ததற்கு நன்றியும், பாராட்டுகளும், வாழ்த்துக்களும்., வளா்ச்சிக்கு உதவுங்கள்..........
வணக்கம்
அன்பு தோழமைகளே உங்களை அழகியபூமி வரவேற்கிறது
கிறிஸ்தவ பாடல்கள்
தமிழ் விவிலியம்
பார்வையிட்டோர்
Website counter

You are not connected. Please login or register

குருக்களின் ஆண்டில் தவக்காலம்

Go down  Message [Page 1 of 1]

brightbharathi



குருக்கள் வாழ்வின் முன் மாதிரியாக விளங்கிய, பிரான்ஸ் நாட்டு, லியோன் மறைமாவட்டத்தின் புனித ஜான் மேரி வியானியின் விண்ணகப் பிறப்பின் 150ஆம் ஆண்டை முன்னிட்டு. இவ்வாண்டைக் குருக்கள் ஆண்டாகப் பிரகடனப்படுத்திய திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் இவ்வாண்டிலே குருத்துவத்தின் மேன்மையை இறைமக்கள் உணர வேண்டுமென்பதோடு குருக்கள் தங்கள் வாழ்வைப் புதுப்பித்து. அர்ப்பணத்தை ஆழப்படுத்த வேண்டுமென்றும் விரும்புகிறார். இதனைச் செயல்படுத்தும் விதமாகவே பல நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் பல நிலைகளில் , மறைமாவட்ட, தமிழக, இந்திய மற்றும் அகில உலக அளவில், நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகள் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றாலும் குருக்களின் வாழ்வைப் புதுப்பிப்பது என்பது அவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியில் அமையக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

குருப்பட்டத்தின் வழியாக ஒவ்வொரு குருவும் இயேசு கிறிஸ்துவின் நித்திய குருத்துவத்தில் பங்கு பெற்றாலும் அவரது வாழ்வும் அர்ப்பணமும் அவரது பணியின் வழியாக தொடர்ந்து நிறைவுக்குக் கொண்டு வரப்படுகிறது. “உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள் கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்” (1 திமொ 1:6) என்று பவலடிகளார் திமொத்தேயுவுக்கு அறிவுறுத்துவது போல , ஒவ்வொரு குருவும் குருப்பட்டத்தின்
அருள்வாழ்வைத் தொடர்ந்து புதுப்பித்து வளர்த்தெடுக்கக் கடமைப் பட்டவராக
இருக்கிறார். இந்தப் புதுப்பித்தல் என்பது ஒவ்வொருவரின் சுய பரிசோதனை
யிலேயே நடைபெறுகிறது.

சுயபரிசோதனை செய்ய மிகவும் உகந்த காலமாக இருப்பது தவக்காலம். இறை அன்பை, இரக்கத்தை, மன்னிப்பை நிறைவாகப் பெற்றுக்கொடுக்கும் காலம் என்று, இத்தவக்காலத்திலே பல கொண்டாட்டங்கள், வழிபாடுகள் வழியாக இறைமக்களை இயேசுவின் பாடுகளின் பாதையிலே தங்கள் வாழ்வைச் சீர்தூக்கிப் பார்க்க வைக்கும் குருக்கள், அக்கொண் டாட்டங்களைத் தங்கள் வாழ்வையும் பற்றி சிந்தித்துப்பார்க்கப் பயன்படுத்த வேண்டும். இறை அருளைச் சுட்டிக் காட்டும் ஒரு கருவியாக மட்டும் நின்றுவிடாது, அந்த அருளைத் தாமும் அனுபவித்து தங்களின் அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்துகொள்பவர் களாக இருக்க வேண்டும்.

நற்செய்திப் படிப்பினையில் தங்கள் வாழ்வைத் திரும்பிப் பார்க்க வைப்பதே தவக்காலச் செயல்பாடு களின் நோக்கமாக அமைகிறது. இயேசு கிறிஸ்து
தனது பொதுவாழ்வை ஆரம்பிப்பதற்கு முன் நாற்பது நாட்கள் தந்தையோடு இருக்க, பாலைநிலத்திற்குச் சென்று தவம் மேற்கொள்கிறார் (காண் மத் 4:1-11; மாற் 1:12-13; லூக் 4:1-13). கடவுளின் மகனாக, மக்களை மீட்க வேண்டும் என்ற
தெளிவான இலக்குடன் இயேசு இவ்வுல கிற்கு வருகிறார் (காண் யோவா 3:16).
கடவுள் தன்மையில் விளங்கிய அவர், மனித உரு எடுத்த நிலையில் (காண் பிலி
2:6-7), தனது இலக்கைக் கூர்மையாக்க, அதை செயல்படுத்தும் வழிமுறைகளைத்
தெளிவு படுத்திக்கொள்ள, பணியின் ஆரம்பத்திலே தந்தையோடு உடன் இருக்க தவம்மேற் கொள்கிறார். இந்தத் தவமானது அவரது வாழ்வின் நோக்கத்தை தெளிவுபடுத்திய தோடு, அதனைச் செயலாக்க வேண்டியதற் குரிய சக்தியையும் மன உறுதியையும் கொடுக்கிறது. தனது பணியில் தந்தையின் பிரசன்னத்தை உறுதிசெய்கிறது.

எனவே தான் பணியில் அழுத்தம், தொய்வு, சோர்வு, தனிமை, தோல்வி ஏற்படும்போதெல்லாம் தான் செல்லும் வழியை உறுதிசெய்து கொள்ள தந்தையைத் தேடிச்செல்கிறார். தனிமையிலே, அதிகாலையிலே அவரோடு உறவாடுகிறார் (மாற் 1:35), குருக்கள், தங்கள் இறையழைத்தலை உணரும்போதே தங்களது அழைப்பின் பணியைப் பற்றிய ஒரு பொதுவான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது, அவர்களின் உருவாக்க நிலையில்
வளர்ச்சி பெற்று, கொஞ்சம் கொஞ்சமாக தெளிவு பெறுகிறது. இதன் அடிப்படையில் தான் தங்களது குருப்பட்ட நாளின்போது தங்களுக்கென்று ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

குருக்கள் எல்லோருக்குமே இயேசுவைப் பின்பற்றுவதும், இறை அரசை அறிவிப்பதுமே அடிப்படையான இலக்காக இருந்தாலும் இதை வாழ்வில் நிறைவேற்றும் விதம் ஒவ்வொருவருக்கும், அவர்கள் மேற்கொண்டுள்ள பணிக்கேற்ப, பொறுப்பிற் கேற்ப, இடத்திற்கேற்ப, காலத்திற்கேற்ப
மாறுகிறது. இப்படிப்பட்ட மாறுபட்ட சூழ்நிலைகளிலும், எப்போதும் தங்கள்
அழைத்தலின் இலக்கிற்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டு மென்றால், அவர்கள் தங்களை அழைத்துள்ள இறைத்தந்தையோடு உறவு கொள்ள வேண்டும்.

இந்த இறை உறவுதான் அவர்கள் செய்யும் எப்பணிக்கும் அர்த்தம் கொடுக்கும். உலகிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குருக்கள் உலக மக்களேடு இச்சமூகத்தில் வாழ்வதால், இச்சமூகத்தைப் பாதிக்கின்ற எவ்வித தீமைகளிலிருந்தும் இவர்கள் தப்புவதில்லை. இவ்வுலகம் கொடுக்கின்ற மதிப்பீடுகள் மற்றும் உலகமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரம், சமூகத்தில் ஏற்படுத்தி யிருக்கின்ற தாக்கங்கள் இவர்கள் வாழ்விலும் பிரதிபலிக்காமலில்லை.

இந்த சவால்களுக்கு மத்தியில், இறையழைத்தலின் நோக்கத்தில் உண்மையுடன் நிலைத்திருக்க வேண்டு மென்றால், குருக்கள் உண்மையிலேயே தங்கள் வாழ்வின் தேடலை முடுக்கிவிட்டு இறைத்தந்தையுடன் உறவாட வேண்டும். அதற்குரிய வாய்ப்பைத்தான் இத்தவக்காலம் அவர்களுக்குக் கொடுக்கிறது. எனவே, இத்தவக்காலத்தில் குருக்கள் சமூகத்திலும் தங்களைச் சுற்றிலும், குறிப்பாக தங்களிலும் இருக்கின்ற தீமைகளை இனம் கண்டு, அவைகளை எதிர்த்துப் போராட வேண்டும். தீமைகளைக் கண்டு பயந்து ஒதுங்கி விடக்கூடாது. தீமைகளுக்கான காரணங்களை எளிதாக பிறர்மீதும், இச்சமூகத்தின்மீதும், ஏன் கடவுளின்மீதும் சுமத்திவிட்டு, தங்களின் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடக்கூடாது.

ஏனெனில் இவ்வாண்டு தவக்காலச் செய்தியில் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் கூறுவது போல, தீமைகளின் பிறப்பிடம் எப்போதும் வெளியிலிருந்து வருவதில்லை. மாறாக, ஒவ்வொரு மனித இதயத்திலிருந்தே வருகின்றது. எனவே ஒவ்வொரு குருவும் தனது பொறுப்பை உணர்ந்து தனது எண்ணத்தில், செயலில், வாழ்க்கை முறையில் இருக்கின்ற தீமைகளை, தாழ்ச்சியுடன் ஏற்று, அவைகளைக் களைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இது அவர்கள் வாழ்வின் சிலுவையாக அமையும். இந்தச் சிலுவைகள் அவர்கள் வாழ்வின் இழுக்காக, அவமானமாக அமையும் என்பதைவிட, அவர்கள் இயேசுவின்
உண்மை யான சீடர்களாக தங்களது அழைத்தலில் வாழ வழிவகுக்கும். ஏனெனில் “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (மத் 16:24) என்று இயேசு கூறுகிறார்.

பேரருள்திரு. முனைவர். ச. அந்தோணிசாமி
முதன்மைக் குரு. பாளை மறைமாவட்டம்

http://www.kavikuyil.yolasite.com

Back to top  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum